இவ்வையத்தில் நாம் வாழ்வது வளர்ச்சி பெறுவதற்கே என்பது அணைவராலும் ஏற்றுகொள்ளப்பட்ட உண்மை . வளர்ச்சி என்பது ஒவ்வொரு உயிர் பொருளின் அடிப்படை. உயிர்மையுள்ள ஒவ்வொன்றும் வளர்ச்சி அடையும். உயிரோட்டமுள்ள மனிதனும், மரமும், செடி கொடியும், விலங்குகளும் தான் வளர்ச்சி அடையும் என்றல்ல, உயிரோட்டம் உடைய கருத்துகளும், எண்ணங்களும், சிந்தனைகளும் கூட வளர்ச்சி அடையும்.
பட்டுகோட்டை கல்யாணசுந்தரனார் ஒரு திரைப்பட பாடலில் கூறுவார் "ஆளும் வளரனும் அறிவும் வளரனும், அதுதாண்டா வளர்ச்சி" என்று. ஆம் உண்மைதான், ஆள் மட்டும் வளர்ந்தால் அது வளர்ச்சி ஆகாது அல்லவா ?, உடன் சேர்ந்து அறிவும் வளர வேண்டும். ஆனால் எனக்கு இன்று இதில் ஒரு வேறுபாடு. வெறும் உடல் வளர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் மட்டுமே ஒரு முழு வளர்ச்சியின் கூறுகளாக இருக்க முடியுமா ????? கண்டிப்பாக இல்லை. உடல் மற்றும் அறிவின் வளர்ச்சியுடன் மன வளர்ச்சியும், மனிதநேய வளர்ச்சியும் இணைந்ததே ஒரு முழு வளர்ச்சி.
ஒவ்வொருவருடைய வாழ்வும் வளர்ச்சி பெற்றால் தான் இவ்வையகம் வளர்ச்சி பெரும்.
இவ்வையத்தில் உயிரின் வாழ்வு தொடங்கியதில் இருந்தே, வளர்ச்சியும் தொடங்கியது. ஒரு செல் உயிரியான "அமீபா" பரிணாம வளர்ச்சி பெற்று, பல உரு மாறி, குரங்காகி, இறுதியில் மனிதனாக வளர்ச்சி அடைந்தது என்று கூறுகிறது அறிவியல். கற்கால ஆதி மனிதன், சுற்றியுள்ள இயற்கையின் அதிசியத்தை கண்டு சிந்திக்க துவங்கினான். பிறகு அவனுடைய ஒவ்வொரு சிந்தனைகளும் வளர்ச்சியின் படிக்கட்டுகளாக மாறின.
சக்கரத்தின் கண்டுபிடிப்புடன் துவங்கிய கற்கால மனிதனின் வாழ்கை இன்று ஒளியின் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் விண் களன்களாக வளர்ச்சி பெற்றுள்ளது. இலைதழை ஆடைகளுடன் துவங்கிய மனிதனின் வாழ்கை இன்று நவ நாகரீக ஆடைகளாக வளர்ச்சி பெற்றுள்ளது. குகைகளை இருப்பிடமாக கொண்டு துவங்கிய மனிதனின் வாழ்கை இன்று நூறு மாடி கட்டிடங்களாக வளர்ச்சி பெற்றுள்ளது. இப்படி பல வளர்ச்சிகளை பெற்று, கற்கால மனிதனின் வாழ்வு ஒரு நவ நாகரீக நிலையை அடைந்துள்ளது. இது மிகவும் சந்தோஷபட வேண்டிய விஷயம் தான் அல்லவா !!!!!
ஆனால் இவ்வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில் நாம் சிந்திக்க வேண்டிய மற்றொன்றும் உள்ளது. அதுயாதெனில், கற்கால மனிதனின் கல் ஆயுதங்களுடன் துவங்கிய வாழ்வு, இன்று கண்டம் விட்டு கண்டம் தாவும் அணு ஆயுந்தங்களாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான வளர்ச்சி அல்லவா !
பழங்கால மனிதன் விலங்குகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள ஆயுதங்களை கண்டறிந்தான், ஆனால் இன்று ஒரு மனிதன் தன்னை அடுத்த மனிதனிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆயுதங்களை தயாரிக்கின்றான். இது தான் நம் வளர்ச்சியின் விளைவா??? ஏன் இந்த நிலை??? வளர்ச்சியின் அர்த்தத்தை நாம் தவறாக புரிந்து கொண்டதே இதற்க்கு காரணம்.
வளர்ச்சி என்பது உடல் மற்றும் அறிவினை சார்ந்தது மட்டும் அல்ல, அது மனம் மற்றும் மனிதநேயத்தை சார்ந்ததும் கூட. இத்தகைய வளர்ச்சி மட்டுமே ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வையும், இவ்வையத்தையும் முழுமையான செழிப்படைய செய்யும்.
இத்தகைய ஒரு முழுமையான வளர்ச்சி பெற்ற ஒரு மனிதர் நம்மிடையே இருக்கிறார். அவர் யார் தெரியுமா??? அவர்தான் நம் அப்துல் கலாம் அவர்கள். அவர் ஒருமுறை ஒரு ஏவுகனை தயாரிக்கும் ஆய்வு குழுவிற்கு தலைவராக இருந்தார். அப்போது அவர்கள் ஒரு இலகுவான எடை குறைந்த ஆனால் பலமான உறுதியான உலோகத்தை அவ்வேவுகனைக்காக தயாரித்தனர். இது அப்துல் கலாமின் அறிவின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. நம் அப்துல் கலாம் அவர்கள் இதே உலோகத்தை கொண்டு மற்றொன்றையும் உருவாக்கினார். அது என்ன தெரியுமா??? கால் இல்லா குழந்தைகளுக்கான செயற்கை கால். அதற்க்கு முன் இருந்த செயற்கை கால் கருவிகள் மிகவும் எடை மிகுந்தவை. அவற்றை போட்டுக்கொண்டு நடப்பது என்பது குழந்தைகளுக்கு மிகவும் வேதனை தர கூடியதாய் இருந்தது. ஆனால் அப்துல் கலாம் குழுவின் இந்த இலகுவான எடைகுறைந்த திறனுள்ள வலிமையான உலோகத்தால் தயாரிக்கப்பட்ட செயற்கை காலினை அணிந்து கொண்டு அக்குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடினர். இந்த கண்டுபிடிப்புதான் தன் வாழ்நாளின் சிறந்த கண்டுபிடிப்பு என்று அவரே பல முறை கூறி இருக்கிறார். இது தான் கலாமின் மனிதநேயத்தின் பரிபூரண வளர்ச்சி. இந்த முதுமையான வயதிலும் இளைஜரை போல சுறுசுறுப்பாக உள்ளாரே, இதுவே அவர் உடலின் பரிபூரண வளர்ச்சி. இத்தகைய முழுமையான வளர்ச்சியை நாம் அனைவரும் பெற்றால் இவ்வையம் செழிப்படையும் .
இன்றைய உலகத்தில் அனைவரும் இத்தகைய வளர்ச்சி பெற்றுள்ளோமா என்று சிந்தித்து பார்கவேண்டும். அணைத்து அறிவியல் வளர்ச்சிகளையும் நாம் இன்று அனுபவித்து கொண்டு இருக்கிறோம், ஆனால் மனதளவில் நாம் என்ன வளர்ச்சி அடைந்து இருக்கிறோம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். மனிதநேயம் இந்த உலகத்தில் வளர்ந்து இருக்கிறதா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
நான் சிந்தித்தேன், ஆனால் வேதனையுடன் கூறுகிறேன் மனதளவிலும், மனிதநேயத்திலும் நாம் எதிர்மறை வளர்ச்சி தான் அடைந்து இருக்கிறோம்.
இவ்வையம் மனிதநேய வளர்ச்சி அடைந்து இருந்தால், பல்லாயிர கணக்கான தமிழர்களை கொன்று, மீதமுள்ளவர்களை விலங்குகளை போல் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கும் செயலை கண்டும் காணாமல் கைகட்டி பார்த்து கொண்டு இருக்குமா இந்த உலகம்??? அறிவியலின் வளர்ச்சி அங்கு கொத்து குண்டுகளாகவும், ரசாயன ஆயுந்தங்கலாகவும், உயிர்களை பலிவாங்குகிரதே தவிர, அவர்களை காப்பாற்ற வழி ஏதும் செய்யவில்லை.
மனிதநேயமும், அனைவரும் நலமாக வாழவேண்டும் என்ற மன வளர்ச்சியும் இருந்தால், எத்தியோப்பாவில் குழந்தைகள் பாலின்றி, தாய்மார்கள் பால் குடுக்க உணவின்றி இறக்கமாட்டார்கள். எங்கும் சண்டை, எதிலும் பிரச்சனை, ஒவ்வொரு நாட்டிற்க்கும் எதிரி நாடுகள், மக்களிடையே போட்டி, பொறாமை, பழிவாங்கும் உணர்வு இவை அனைத்தும் நன்றாகவே வளர்ந்துள்ளது. இந்த கீழ்த்தனமான எதிர்மறை வளர்ச்சியை எப்படி நாம் ஒழிப்பது???
ஒழுங்கான, சிறப்பான, மனிதநேய அடிப்படையிலான கல்வியை சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் அவர்களை முழுமையான வளர்ச்சியை பெறவைத்து, அவர்களின் வாழ்வையும், இவ்வையத்தையும் செழிபடைய செய்ய முடியும். இந்த பணியானது பெற்றோர் மற்றும் ஆசிரியர் கையிலேயே உள்ளது. இந்த பெற்றோர் - ஆசிரியர் கூட்டணியால் மட்டுமே இதை சாதிக்க இயலும்.
நாம் ஒவ்வொருவரும் பிரிவினையை உருவாக்க கூடிய எந்த ஒரு குறுகிய வட்டத்தின் உள்ளும் அடைபடாமல் " மனிதன்" என்ற ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்று படுவோம். "ஒன்றுபட்ட உலக மனித சமுதாயம்" உருவாக பாடுபடுவோம்.
" வளர்க மனிதநேயம் :) "
" செழிக்க மக்களின் வாழ்வு :) "
" வாழ்க இவ்வையகம் :) "
2 comments:
தமிழ் பதிவுக்கு வாழ்த்துக்கள்!..
அன்பின் சாரத்திலுள்ள விவரிக்கவியலா மகிழ்வினால் மட்டுமே பிரிவினால் உருவெடுத்த தீவிர வேதனையை இப்பிரபஞ்சத்திலிருந்து விலக்க முடியும்..
தமிழில் பதிந்தமைக்கு வாழ்த்துக்கள்.
சிறப்பான கட்டுரை.
Post a Comment