Sunday, September 5, 2010

எனது விருப்பமான முயற்சிகள், தவறிருந்தால் மன்னிக்கவும் திருத்தவும்

ஆதியில்லா தமிழும், அந்தமில்லா அதன் புகழும்
விட்டமில்லா வெளியும், விடையில்லா அதன் நிலையும்
உடலில்லா உயிரும், உருவில்லா அதன் உண்மையும்
அறிய உணர மலர்ந்தோம் இங்கு மானுடனாய்.


இருளின்றி ஒளியில்லை, ஒளியின்றி இருளுண்டு
இரவின் இருளை உணர்வோர் உண்டு
பகலின் இருளை உணர்வோர் உண்டோ
இதையுணர்வோர் உணர்வார் இருளே உண்மையாம்.


தும்பிக்கை கொண்டஅவன் நம்பிக்கை தந்திடுவான்
வேலவனின் அண்ணன்இவன் வினைகளெல்லாம் அறுத்திடுவான்
முனி அகத்தியனின் அறிவு அவன்
கனி ஒளவையின் ஆசான் இவன்
அவன் இவன் எவனென்றே அறியாரையும்
அன்பால் அரவணைப்பவன் எவன் ??? அவனே இவன்.

கருவாகி உயிராகி உணர்வாகி உருவாகி
மழலையாய் மாணாக்கனாய் வாலிபனை வயோதிகனாய்
ஓடோடி வழிதேடி போராடி யதைகொண்டாடி
முற்றுமோயிந்த முடிவிலி வாழ்கை - அன்றே
தொடருமோ மீண்டும் கருமுதலாய் ???????

உழுநர் உழுபடையேந்தி உழைப்பறி உழைஉழுத்த
ஊழியான் ஊழியன் உண்டிபசியால் உயக்க
உரியவன் பசிக்க உடையவன் புசிக்க
ஊழிமுதல்வனே உழவனின்ஊழ் வினைத்தீராயோ

பிறப்புண்டேல் இறப்புண்டு இறப்புண்டேல் மீண்டும் பிறப்புண்டோ
தீயவர் பிறப்பார் செய்தத்தீயதை துவ்வ - எனில்
நல்லோரும் பிறப்பார் செய்த நன்மையை துவ்வ
தீயவழி நல்வழியென இரண்டில்லை முக்தி முகடடைய
பொதுவழிஅது ஆதிமுக்தன் முக்கண்ணன் கண்டவழியே :)

மலர்ந்த கண்களிலே காட்சிகள் அற்று
விடும் மூச்சினிலே கவனத்தை வைத்து
செவிகளிலே பிரபஞ்ச ஓம்காரம் கேட்டு
நாவின் சொற்களிலே மௌனத்தை ஏற்று
பொய் மெய்தனிலே கவனத்தை விட்டு
சிந்தையிலே சிவசோதியை ஏற்று.

உயிர்பதெல்லாம் இயற்கை
இருப்பதெல்லாம் இயற்கை
இறப்பதெல்லாம் இயற்கை
இறைவனெல்லாம் இயற்கை
இதைமறப்பதுவே செயற்கை
மறுத் தறுத்து உணர்வதுவே யென்வேட்கை

புறகண்களின் வெளி மாயயை அழித்து
அககண்ணினுள் மெய் காட்சியை கொடுத்து
சித்தனாய் சுடலையாய் பித்தனாய் பிறைசூடனாய்
வருவாய் பிறப்பறுப்பாய் சிவனே

(தொடரும்)

No comments: