Wednesday, January 1, 2014

மாணவசக்தி மகத்தான சக்தி மட்டுமல்ல மந்திர சக்தியும் கூட


அமிழ்தாம் தமிழில், அவையோர் அன்பில் , ஆதிணன் அருளில்

அடுத்த சில நிமிடம் - இவடியேன் உரை

அவையோர் அனைவருக்கும் வணக்கம்.

மானுடனாய் பிறப்பதற்கு மாதவம் செய்தல் வேண்டும் என்பார்,

அதிலும் மாணாக்கனாய் இருப்பதற்கு பெருந்தவம் செய்தல் வேண்டும்.

ஏட்டுகல்வி மட்டும் அல்லாது, நற்சிந்தனைகளையும், செயல்களையும், ஒழுக்கத்தையும் கற்று ஏற்றுகொள்ளும் ஒரே பருவம் மாணவர் பருவம். இவ்வுலகம் கண்ட அணைத்து அறிஞர்களையும், தத்துவவியலாளர்களையும், புரட்சியாளர்களையும், மாமேதைகளையும், அரசியல் வல்லுனர்களையும் உருவாகியது அவர்களின் மாணவ பருவம்.

மாணவசக்தி மகத்தான சக்தி மட்டுமல்ல மந்திர சக்தியும் கூட

தேவையானவற்றை படைத்தல், காத்தல், தேவையற்றதை அழித்தல் இவைதான் இறைவனின் பணி. இது அறிவியலின் பணியும் கூட. உலக இயக்கத்தின் அடிப்டையான இந்த பணியை மேற்கொள்ள மானுடர்களை தயார் செய்யும் பருவம் மாணவர்பருவம். அறிவியலாளனாய், சமூக ஆர்வலனாய், அரசியல்வாதியாய், போர்வீரணாய், போதகணாய் ஒருவன் உருவெடுக்க ஊக்குவிக்கும் தருணம் மாணவபருவம்.

இப்படிப்பட்ட மகத்தான இந்த சக்தியை விவாதிக்கும் இத்தருணத்தில் நாம் இன்னொரு முக்கியமான விடயத்தை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். சக்தி சூழலை சார்ந்தது. விளக்கு நிறைய எண்ணை இருந்தாலும், இளம்பஞ்சு திரி இருந்தாலும், அத்திரி தூண்டபட வேண்டும், அன்றேல் திரி மூழ்கி ஒளி மறையும்.

மாணவ சக்தி என்னும் பேரொளியை தூண்டத்தான் இந்த கல்வி அமைப்பு, ஆசிரியர்கள், தேர்வு மற்றும் பிற.

தெய்வத்திற்கு முன்னாள் வைக்கபட்ட, மனித தெய்வங்களாகிய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓர் வேண்டுகோள். அளவிற்கு அதிகமாக தூண்டப்பட்ட இளம்பஞ்சு திரி, அதிக ஓளி விடுவதை போல தோன்றினாலும், அது கருகி சாம்பலாகும்.

மாணவர்களுக்கு சுதந்திரம் அவசியம். அது அவர்களின் உரிமை. அதே தருணத்தில் மாணவர்களின் சிந்தனைக்கு ஒரு கேள்வி. இங்குள்ள அணைத்து மாணவர்களும் சுதந்திர விரும்பிகலாகதான் இருப்பீர்கள். ஆனால் எது சுதந்திரம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா ???

தேர்வு வேண்டாம் என்பது சுதந்திரமா??? அல்லது அத்தேர்வை நல்லபடி தெரிந்தவரை எழுதிவிட்டு மன மகிழ்ச்சி அடைவது சுந்தந்திரமா ??? வகுப்பறையில் கவனிக்காமல் சன்னல் வழி, விழி வைத்திருப்பது சுதந்திரமா ??? அல்லது ஆசான் சொல்லும் பாடத்தை முழுமையாக கவனித்து, புதிய கருத்துகளை புரிந்து கொள்வது சுதந்திரமா ???

சிந்தியுங்கள் மாணவர்களே !!!

கட்டுபாடுகள் இல்லையெனில் சுதந்திரம் என்ற ஒன்றை எவராலும் அனுபவிக்க இயலாது. சுதந்திரமும், கட்டுபாடும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றில்லையேல் மற்றொன்று செல்லா காசு.

எனவே பெற்றோரும், ஆசிரியரும் சமூகமும் வகுக்கும் சில கட்டுபாடுகள் அவசியம் என்பதை மாணவ சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

திரி தூண்டபடதான் வேண்டும் !!!

இத்தூண்டுதலை மாணவர்கள் தங்களுக்கு தாங்களே செய்து கொண்டால், அதுவே சுதந்தரத்தின் உச்ச கட்டம், விழிப்புணர்வின் ஆரம்பம்.

இங்குள்ள பல மாணவர்கள் விளையாட்டு வீரர்கள் என்றறிவேன். விளையாட்டு மனித சமூகத்தை செம்மையாகும் ஒரு சமூக செயற்கருவி. விளையாட்டின் அம்சங்களாகிய மனவுறுதி, உடலுறுதி, எதிரியையும் பாராட்டுதல், சகிப்புத்தன்மை, அதேசமயம் போர்குணம் என மற்றும் பல, ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய பண்புகள். இத்தகைய பண்புகளை ஏந்திநிற்கும் மாணவ செல்வங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இறுதியாக ஒன்று கூற விரும்புகிறேன். மாணவர்களே, மாணவபருவத்தை முழுமையாக அனுபவியுங்கள். இங்குள்ள ஒவ்வொரு பெரியவர்களையும் கேட்டுபாருங்கள், அனைவரும் சொல்வது, அவர்களின் வாழ்கையின் முக்கிய மறக்க முடியாத மகிழ்சியான தருணம் மாணவர் பருவம்.

நீங்கள் இன்று சிலவற்றை சுமை என கருதலாம், தேர்வு சுமை, வீட்டுபாட சுமை, கூடுதல் வகுப்பு நேர சுமை. கூர்ந்து கவனியுங்கள். சுமை என சொல்லுவது உங்கள் எண்ணமா அல்லது உங்கள் உடலா ??? எண்ணம் சொன்னால் அது மாயை. மன வலிமையை கூட்டுங்கள், சுமை சுகமாகும். உடல் சுமை என்று சொன்னால் நிறுத்திவிடுங்கள். உடலளவில் வருத்தி கொள்வது ஆபத்தானது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். மாணவர்களின் மன வலிமையை, நல்ல கருத்துகளாலும், உரையாடல்களாலும், அளவான அன்பான அறிவுரைகளாலும் கூட்டுவது பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகத்தின் கடமை.

மாணவர்களே!!! நீங்கள் நாளைய விஞ்சானிகள், அறிவியலாளர்கள், தத்துவவாதிகள், அரசியல்வாதிகள், கொள்கை அமைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள். நீங்கள் நாளை எதுவானாலும் சரி, ஒன்றைமட்டும் மறவாதீர்.

மானுடத்தின் அடிப்படை பண்பு மனிதநேயம் . மொழிகடந்து, இனம்கடந்து, சாதி ஒழித்து, நாடுகள் எல்லை கடந்து, இந்த பிரபஞ்சம் கடந்து அணைத்து உயிர்களையும், உன்னுயிராய் மதியுங்கள்.

வாழ்க தமிழ், வாழ்க மனிதம், வளர்க மனித நேயம்
( I wrote this few months back for my friend to address school students gathering)